உலகின் மிக முக்கியமான வளங்களில் ஒன்றாக கனிம வளம் கருதப்படுகிறது. அவற்றின் பயன்பாடு பல வளர்ச்சி மற்றும் நிலையான திட்டங்களை உருவாக்குவதற்கு அடிப்படையானது.
குறிப்பிட்ட சில கடலோர பகுதிகள் கார்னெட், இல்மனைட், ருட்டைல், சிர்கான், சில்லிமனைட், லியுக்காக்ஸின் போன்ற கனிமங்களாலும் மோனசைட் போன்ற பூமியின் மதிப்புமிக்க அரிய கூறுகள் (REE) கொண்ட கனமான கனிமங்களாலும் நிறைந்துள்ளது. இக்கனிமங்கள் கடற்கறையிலிருந்து எடுக்கப்படாவிட்டால் கட்டுமானப்பணிகள், குழிகளை நிரப்புதல் போன்ற பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இது நம் தேசத்தின் வளங்களை வீணாக்குவதாகும்.
மலைகளிலுள்ள பாறைகளில் தோன்றி ஆறுகளால் அடித்து வரப்பட்டு கடலில் சேரும் கனிமங்கள் , அவற்றின் கனத்துக்கு ஏற்றார்போல் காற்றில் அடித்து செல்லப்பட்டு கடற்கரைகளில் படிகிறது.
தோற்றத்தையும் தன்மையையும் பொறுத்து மீட்கக்கூடியவை (replenishable) மீட்க முடியாதவை (non replenishable) என கனிமங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. கடலோர கனிமங்கள் மீட்கக்கூடிய வகையைச் சேரும்.
தற்போதைய தொழிற்ச்சூழலில் கனிமங்களை அகழ்வெடுக்கும் தொழில்நுட்பமும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானவை. கடலோர கனிமவளத் தொழிற்துறையின் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் அதே வேளையில் சுற்றுச்சூழலை சம நிலையில் வைத்திருக்க பலவித நடைமுறைகள் உள்ளன. எனினும் கனிமங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான உரிமம் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டால் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
கடலோர படிமங்களில் கண்டறியப்படும் கனிமங்கள் பல விகிதங்களில் கலவையாக இருக்கின்றன. கண்டறியப்படும் கடலோர படிமங்கள் கனிம உற்பத்தியாளர்களால் எடுக்கப்பட்டு, கனிமம் பிரிக்கப்பட்டு பின்னர் கழிவு மணல் (tailings) எடுத்த இடத்தில் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. மேலும் பசுமைச்சூழலை உருவாக்க மரக்கன்றுகளும் நடப்படுகின்றன.
அகழ்வெடுத்தல் முழுக்க முழுக்க மனித உழைப்பை சார்ந்தது தான். கடற்கரையின் மேலடுக்குகளில் படிந்துள்ள கனிமங்கள் மண்வெட்டி, மண்ணள்ள கூடைகள் போன்ற எளிய பொருட்களையும், உபகரணங்களையும் கொண்டுதான் அகழ்வு பணி நடக்கும். கனரக இயந்திரங்களின் பயன்பாடு கிடையாது. வெடிக்க வைப்பதோ, ஆழ்துளையிடப்படுவதோ, துவாரங்கள் இடப்படுவதோ கிடையாது.
அகழாய்வு முறை சுற்றுச்சூழலுக்கு எவ்விதத்திலும் கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதில்லை. ஒவ்வொரு கனிமமும் அதன் தன்மைக்கேற்ப ரசாயனங்களின் பயன்பாடில்லாமல் எளிய முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
கடலோர கனிமங்கள் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட பயன்பாடுகள் கொண்டவை. அவை பல அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியிலும், தொழில் இயந்திரங்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது. ரத்தின கற்கள், பீங்கான்கள், கண் பார்வைக்கான சாதனங்கள், மின் சாதனங்கள் மற்றும் இன்னும் பலவற்றின் உற்பத்திக்கு கடலோர கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பூமியின் அரிய தனிமங்கள் (Rare Earth Elements (REE)) என சொல்லப்படும் தனிமங்கள் மொத்தம் 17 இருக்கின்றன. இவற்றை கனமற்ற தனிமங்கள் என்றும் கனமான தனிமங்கள் என்றும் இருவகைப்படும். கனமற்ற தனிமங்கள் அதிகமாக கிடைக்கக்கூடியவை . கனமான தனிமங்கள் அந்த அளவுக்கு அதிகமாக கிடைக்கப்பெறாதவை. பல்வேறு உற்பத்தி மற்றும் தொழில்களில் இத்தனிமங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் மோனசைட் இருப்பில் இந்தியா 71%-த்தை கொண்டுள்ளது. இந்தியாவில் REE-ன் ஒரே ஆதாரமும் இதுதான். தற்போது 95% விற்பனையோடு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சமீபத்திய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் சர்வதேச தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி கொண்டிருக்கிறது சீனா. இவ்வாறான சர்வதேச சூழலில் பிரதான இடத்தை அடைவதற்கு இந்தியா முனைப்புடன் செயல்படவேண்டும்.
மோனசைட் இருப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு, சரியான கொள்கையை இந்திய அரசு வகுக்குமானால், கடலோர கனிமவளத் தொழிற்துறை முன்னேற்றம் காணும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அந்நிய செலாவணி கூடும். தீர்க்கமான வல்லரசாக இந்தியா மாறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.